Saturday, April 2, 2011

முடிகிறது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இந்த கிரிக்கெட் திருவிழாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியாகின்றன.


அடுத்த வாரத்தில் மட்டும் 10 புதிய, பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

கடந்த பிப்ரவரியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. அன்று முதல் திரைப்படங்கள் சீந்துவாரின்றி போயின. வசூல் அடியோடு பாதிக்கப்பட்டது.

இன்றுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவதால் 10 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன.

இதில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க மாப்பிள்ளை படம் வருகிற ஏப்ரல் 8-ந் தேதி ரிலீசாகிறது. இது 1989-ல் வெளியான ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் ஆகும்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கோ படமும், முதல்வர் கருணாநிதி வசனத்தில் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் படமும் ஏப்ரல் 15-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை மற்றும் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்டேன் போன்ற படங்கள் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகின்றன.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க எங்கேயும் காதல் படம் வருகிற 29-ந் தேதியும், சிம்பு, பரத், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள வானம் படம் மே 6-ந் தேதியும் ரிலீசாகின்றன.

180 என்ற பெயரில் சத்யம் சினிமாஸ் தயாரித்துள்ள படம் மே 13-ல் வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள அவன் இவன் படம் மே 20-ம் தேதியும், விக்ரம் நடிக்க விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகன் படம் மே 27-ம் தேதியும் திரைக்கு வருகிறது.

டோணி தலைமையில் புதிய வரலாறு படைத்தது இந்தியா-2வது உலகக் கோப்பையை வென்றது

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றுள்ளது. மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் அடித்துத் துவைத்து வெற்றி பெற்று தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.
Indian Cricket Team
Getty Images
இதுவரை கபில்தேவ் வசம் மட்டுமே இருந்து வந்த உலகக் கோப்பைப் பெருமையில் டோணி தலைமையிலான வீரர்கள் இணைந்துள்ளனர்.
28 ஆண்டு கால உலகக் கோப்பைக் கனவையும் டோணி தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றி உலகெங்கும் உள்ள இந்தியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

2வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மிகப் பிரமாதமான சேஸிங்கில் ஈடுபட்ட இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் இன்று ஏமாற்றமளித்தனர். அதிரடியாக ஆரம்பித்த சச்சின் 18 ரன்களில் ஆட்டமிழந்தபோது மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த இழப்பை ஈடுகட்டி விட்டார் கெளதம் கம்பீர். அபாரமாக ஆடிய அவர் மிகுந்த மன வலிமையுடன் பொறுப்பை உணர்ந்து சீராகவும், சிறப்பாகவும் ஆடினார். அவரும் கேப்டன் டோணியும் இணைந்து மிகச் சிறப்பான கட்டத்திற்கு இந்திய அணியை இட்டுச் சென்றனர்.

விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து இருவரும் அணியை வெற்றி இலக்குக்கு அருகில் கொண்டு சென்று விட்டனர்.

கம்பீரின் ஆட்டம் இன்று வெகு சிறப்பாக இருந்தது. சரியான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பி இலங்கைப் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார் கம்பீர். 122 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார் கம்பீர்.

இருப்பினும் மறு முனையில் கேப்டன் டோணி தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்று புதிய வரலாறு படைத்தார்.

3வது முயற்சியில் 2வது கோப்பை

இந்தியா உலகக் கோப்பையை கடந்த 1983ம் ஆண்டு முதல் முறையாக வென்றது. கபில் தேவ் தலைமையிலான அந்த அணியின் பந்து வீச்சாளளர்கள் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தனர்.

அதன் பின்னர் 2003ம் ஆண்டு 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இருப்பினும் அப்போது பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் சொதப்பியதால் இந்தியா படு தோல்வியுடன் கோப்பைக் கனவைத் தகர்த்துக் கொண்டு தாயகம் திரும்பியது.

2011 உலக்க கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் 3வது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா. இந்த முறை பேட்ஸ்மேன்கள் மூலம் இந்தியாவுக்கு பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது.

3 முறை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்தியா, தனது 3வது முயற்சியில் 2வது உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ளது.

டோணிக்கு 2வது உலகக் கோப்பை

கேப்டன் டோணிக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் விசேஷமானதாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு அவர் முதல் முறையாக நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

தற்போது ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்கள் வரிசையில் இதன் மூலம் அவர் முன்னணிக்கும் உயர்ந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டிப் பிடித்து விட்டார்.

சச்சின் கனவு நனவானது

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உலகக் கோப்பை பெருமைக்குரியதாக இருந்தாலும் கூட, அவர் சரியாக விளையாடாத நிலையில் இந்த உலகக் கோப்பை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடியும் கூட இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாத நிலை இருந்தது.

22 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் தனது ஆட்டத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில் கோப்பையை தொட்டிருப்பது நிச்சயம் அவருக்கு சந்தோஷமானதாகவே இருக்கும். இருப்பினும், இன்றைய இறுதிப் போட்டியில் அவரால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாதது கோடானு கோடி ரசிகர்களைப் போலவே அவருக்கும் பெரிய ஏமாற்றமாகவே இருக்கும்.

டோணி ஆட்ட நாயகன்

79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய கேப்டன் மகேந்திர சிங் டோணி ஆட்ட நயாகன் விருதைப் பெற்றார்.

யுவராஜ் சிங் தொடர் நாயகன்

உலகக் கோப்பை போட்டித் தொடர் முழுவதும் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் பிரமாதமாக தனது திறமையை வெளிப்படுத்திய, நெருக்கடி நேரத்தில் இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

போட்டித் தொடரில் மொத்தம் 4 மேன் ஆப் தி மேட்ச் விருதைப் பெற்றவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது.

மஹேளா ஜெயவர்த்தனே சதம் அடித்தார். ஆரம்பத்தில் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் திக்கித் திணறி ஆடிய இலங்கை, பின்னர் சங்கக்கரா, ஜெயவர்தன உதவியுடன் மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. ரன்களை எடுப்பதை விட, விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர் இலங்கை வீரர்கள். இதனால், இறுதி ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தனர்.

200 ரன்களைத் தாண்டியதும் அடித்து ஆட ஆரம்பித்தனர் இலங்கை வீரர்கள்.

இந்தப் போட்டியில் நிதானமாகவும் உறுதியுடனும் நேரம் வாய்த்த போது அடித்தும் சிறப்பாக ஆடிய ஜெயவர்தன, 85 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 14வது சதம். இந்திய பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கையின் ஸ்கோரை, 250 தாண்ட உதவியது இவரது சதம்தான்.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கான் 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் இவர் தொடர்ந்து 3 மெய்டன் ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்பஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆரம்பத்தில் சிறப்பான பந்து வீச்சு, பீல்டிங் என அசத்திய இந்திய அணி, கடைசி ஓவர்களில் அசட்டையாக இருந்துவிட்டதால், இலங்கை பெரிய ஸ்கோரை எட்டிவிட்டது.

கோப்பையை வழங்கினார் பவார்

ஆட்ட நாயகன், போட்டித் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், இந்திய அணியின் கேப்டன் டோணியிடம் வழங்கினார்.