நகுல் இடத்தை பிடிப்பார்கள் போல் தெரிகிறது அஜீத்தும், ஜெயம் ரவியும்! ஹையோடா என்று அவசரப்படாதீர்கள். இது தண்டனை சட்டம் பெப்சி விதிகளுக்கு உட்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நகுல் நடிக்கும் கந்தக்கோட்டை படத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தீர்மானித்தது பெப்சி என்று சொல்லப்படுகிற திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். காரணம், இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நகுல் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். இதில் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது. இவர்கள் கலந்து கொள்ள வசதியாக வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்தாலும் ரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டும் நயன்தாராவே பிரச்சனைக்கு பயந்து மாநாட்டில் கலந்து கொண்டார். நிலைமை அப்படியிருக்க, அஜீத்தும், ஜெயம் ரவியும் கலந்து கொள்ளவில்லையே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் என்ன என்று யோசித்து வருகிறார்களாம் பெப்சியில்.
இருவருமே வெளிநாட்டில் நடைபெற்ற அசல் மற்றும் தில்லாலங்கடி படப்பிடிப்பில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சியா, படைப்பாளியா என்ற மோதல் வந்தபோது இக்கட்டான நேரத்தில் தொழிலாளர்கள் பக்கம் நின்றவர் அஜீத். இதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையெல்லாம் மனதில் வைத்து இந்த முறை அவர் மீது நடவடிக்கை பாயாது என்றும் கூறப்படுகிறது.