Monday, November 23, 2009

Vettaikaran Audio Release Part 2

Vettaikaran Audio Release Part 1

Sunday, November 22, 2009

தந்தை மகனுக்காற்றும் உதவி



தந்தை மகனுக்காற்றும் உதவி... மகனை வைத்து படம் எடுப்பதுதான் என்பதை நிரூபித்த பாக்யராஜ் தனது மகனை வைத்து சித்து +2 என்ற படத்தை எடுத்து மொசர்பேர் நிறுவனத்திடம் விற்றும் விட்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சாந்தனு இப்போது ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் ஹோசிமின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் முழுநீள ஆக்க்ஷன் படம் என்பதால் இதற்கு அடுத்த படத்தையும் சாந்தனுவை வைத்து இயக்குவதற்கு தயாரான பாக்யராஜ் கதையை யோசித்து யோசித்து கடைசியில் தாம் முதலில் இயக்கிய படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்தையே ரீமேக்காக எடுத்துவிடும் முடிவெடுத்துவிட்டாராம்.
ஆனால் அந்தக் கதை இப்போதைய சூழ்நிலைக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றம் பெறுகிறது.
இதற்காக கதையிலும் மாற்றம் செய்துவிட்ட பாக்யராஜ் திரைக்கதை எழுதும் பணியில் இப்போது இருக்கிறாராம்.

ஐந்து பெண்களை மீண்டும் ஏமாற்றும் ஜீவன்

அட ரொம்பதான் ஜாலி மூடில் இருக்கிறார் இயக்குநர் செல்வா. இருக்காதா பின்னே... அவருடைய படம் நான் அவனில்லை பாகம் 2.. ஏ சர்டிபிகேட் வாங்கிவிட்டதல்லவா..? விட்டா இந்த சந்தோஷத்தை விருந்து வைத்து கொண்டாடுவார்கள் போலும்.
இப்போதெல்லாம் ஏ சர்டிபிகேட் கொடுத்துவிடமாட்டார்களா என்று குலதெய்வத்திடம் கூட சில இயக்குநர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து பெண்களை ஏமாற்றும் கதை கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் வந்து ஏதோ கொஞ்சம் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது.
இதனால் உற்சாகமடைந்த இயக்குநர் செல்வா டீம் அதே ஜீவனை கதாநாயகனாக வைத்து பாகம் 2 ஐயும் தயாரித்துவிட்டார்கள்.
இப்போது இந்தப் படமும் ஏ சான்றிதழ் வாங்கி ரீலிசுக்குத் தயாராகிவிட்டது.
இந்தப் படத்திலும் ஐந்து பெண்களை ஏமாற்றுவதுதான் ஜீவனின் வேலையாம்.
சுவிட்சர்லாந்து, துபாய் போன்ற இடங்களில் அலைந்து திரிந்து காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

வர்றார் ஜக்குபாய்

ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவருவதாக இருந்த படம் ஜக்குபாய். பின்னால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அந்தப் படம் ரஜினியை வைத்து எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
பின்பு ராதிகா சரத்குமார் அந்தப் படத்தின் கதையை கேட்டு சரத்குமாரை கதாநாயகனாகப் போட்டு ஜக்குபாய் படத்தை எடுத்தார். இந்தப் படம் தயாராகியும் விற்பனையாகாமல் இருந்தது.
இப்போது சரத்குமாரின் பழசிராஜா ரிலீசாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.
டிசம்பர் 11 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது. பழசிராஜாவில் சரத்குமாரின் நடிப்பு நன்றாக உள்ளது குறித்து பிரிவியு பார்த்த பிரபலங்கள் பாராட்டியுள்ளார்களாம்.
இந்த வரிசையில் ஜக்குபாயும் ஹிட்டாகும் என்று நம்புகிறார் சரத்குமார்.
ஆனால் சரத்குமாரின் சமீபத்திய படங்கள் எல்லாம் விஜயகாந்த் படங்களைப் போல் டுமீல் ரகங்கள் ஆகிவிட்டதால் இந்தப் படம் தேறுமா என்ற சந்தேகத்துடனே ஜக்குபாயை எதிர்பார்க்கிறார்கள் சரத்குமார் ரசிகர்கள்.

2012 : ருத்ரம் பட விமர்சனம் ('உலகம் அழிய நேர்ந்தால்...' )

'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் 'ருத்ரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமா த்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்... இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள்.

படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது.

"பழசிராஜா" திரைவிமர்சனம்

கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம். இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.

பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.

இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.

எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.

எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.

மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.

இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.