கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம். இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.
பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.
இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...
கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.
எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.
எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.
மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.
இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.
No comments:
Post a Comment