Tuesday, October 20, 2009

ஆதவன்- திரை விமர்சனம்

நடிப்பு: சூர்யா, வடிவேலு, நயன்தாரா, முரளி, சரோஜாதேவி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் தொடர்பு: நிகில்

மின்சாரக் கண்ணா என்ற தனது தோல்விப் பட பார்முலா இந்த முறையாவது வெற்றியைத் தருமா என (விஷ) பரீட்சையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரிசல்ட்? கடைசி பாராவைப் பாருங்க!

குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி முரளியிடம் வருகிறது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ஒரு பிராடு டாக்டர், நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டு, கூலிக்கு கொலை செய்யும் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்.

முதல்முறை நீதிபதியைக் கொல்ல சூர்யா முயலும்போது இலக்கு தப்பி விடுகிறது. பின்னர் வடிவேலுவின் துணையோடு நீதிபதியின் குடும்பத்துக்குள் நுழைகிறார். அங்கே, சரோஜாதேவி, நயன்தாரா என ஒரு பெரும் பட்டாளத்தைச் சமாளித்து, அவர்களின் அன்பைப் பெறுகிறார்.

அங்கு போன பிறகுதான் தான் யார் என்பதைப் புரிந்து கொள்கிறார் சூர்யா. சூர்யாவின் பிளாஷ்பேக் என்ன? நீதிபதியை அவர் கொன்றாரா இல்லையா என்பது மீதிக் கதை.

ரமேஷ் கண்ணாவின் இந்தக் கதையில் லாஜிக் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

சூர்யா நினைத்தால் ஆகாயத்தையே வில்லாய் வளைப்பார்... அவரால் ஆகாத காரியமே இல்லை என்பதுதான் அவரது பாத்திரத்துக்கான சுருக்கமான விளக்கம்.

வடிவேல்தான் படத்தின் நிஜமான நாயகன்... அது கூட இடைவேளை வரைதான். அதற்கப்புறம் வடிவேலுவை ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரிதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நயன்தாரா...அவருக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று புரியவில்லை. சரோஜாதேவி அண்ட் கோ கூட்டத்தோடு அவ்வப்போது வருகிறார், சூர்யாவுக்காக உருகிறார், கனவில் பாட்டுப் பாடுகிறார், க்ளைமாக்ஸில் காரில் தொங்குகிறார். அவ்வளவுதான்.

சரோஜா தேவி என்ற பழம்பெரும் நடிகை மீது ரசிகர்களுக்கிருக்கிற மரியாதையை முடிந்தவரை கெடுக்க முயற்சித்திருக்கிறார்கள் இந்தப் படத்தில்.

மறைந்த மலையாள நடிகர் முரளியின் நடிப்பு நிறைவு. ரமேஷ் கண்ணா எதற்காக வருகிறார் இந்தக் கதையில்... அது சரி, கதாசிரியராச்சே!

பின்னணி இசை கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை, 'அசிலி பிசிலி ரசாமளி...' என்றெல்லாம் மொழிக் கொலை செய்து வரும் பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏன் இந்த கொலை வெறி?

கணேஷின் காமிரா இதம்.

ஆதவன் - இருபது வருடத்திற்கு முன்பு வர வேண்டிய படம் - ஏமாற்றமே

No comments: