Sunday, June 13, 2010

புலிகளுக்கு எதிரான படம்? : சீமான் கொந்தளிப்பு!

விடுதலைப்புலிகள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மலையாள படமான ராம ராவணன் படம் குறித்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அது பின் வருமாறு-

ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டுள்ளது.

தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக, படம் பார்த்துவிட்டு வந்ததும், உணர்வுள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பலர் கொந்தளித்தார்கள்.

சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.

இந்தப்படம் வெளியானால் அது மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்காக போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் பதிவாகவும் அது அமையும். அதற்கு இடம் தர முடியாது.

கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.

தமிழ் ஈழ விடுதலைப் போரின் அடியோ முடியோ தெரியாமல் தற்குறித்தனமாக எடுத்திருக்கும் படம் இது. இந்தத் தவறான படத்துக்கு தமிழ் மண்ணில் இடம் கிடையாது.

மீறித் திரையிட முயன்றால், தமிழகத்திலும், உலகில் தமிழ் மக்கள் வாழும் எந்தப் பகுதியிலும் இந்தப் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்.

இப்படி ஒரு தவறான படத்தை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: