செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சங்க வளாகத்தில் திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.
சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த விஜய், 'நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?' என்று நேரடியாகக் கேட்க, நஷ்ட ஈட்டின் அளவை பன்னீர் செல்வம் விளக்கினார்.
ஆனால் அவர் கேட்ட தொகையைக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதுபோல விஜய் பேச, விருட்டென்று எழுந்து போய்விட்டார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்.
நிலைமையின் தீவிரம் உணர்ந்ததால், மேலும் இறங்கிவந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இனியும் இந்தப் பிரச்சினையை வளர விடுவது சரியல்ல என்று சரத்தும் ராதாரவியும் விஜய்யிடம் கூறினார்களாம்.
இப்போது இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியுள்ளன. அதன்படி காவல்காரன் படத்தை குறைந்த விலைக்கு விற்பதென்றும், அடுத்த படத்தையும் இதேபோல விற்று நஷ்டத்தைச் சரிகட்டுவதாகவும் விஜய் கூறியுள்ளாராம்.
இதில் சமாதானமடைந்து, திரையரங்க உரிமையாளர்களும் விஜய்க்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment