Thursday, September 24, 2009

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

'வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய்.

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு.

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம்.

மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில்.

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம்.

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம்.

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!.

No comments: