ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது |
2007, 2008 ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அடுத்த மாதம் 8 ந் தேதி நடக்கிறது. சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. |
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பிக்கும் பொருட்டு மாநில அளவிலான "கலைமாமணி'' விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது. 2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா, 28 11 2009 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக கவர்னர் பர்னாலாவும், முதல் அமைச்சர் கருணாநிதியும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஏற்கனவே கலைமாமணி விருது பெற்ற மூத்த கலைஞர்கள் மூன்று பேருக்கு தலா 15 ஆயிரம் வீதம் பொற்கிழி தொகையும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் செய்து வருகின்றது. அது போலவே, 8 12 2009 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. முதல் அமைச்சர் கருணாநிதி, விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார். விழா ஏற்பாடுகளை தமிழக அரசின் செய்தித் துறை செய்து வருகின்றது. இந்த விழாவில் சிறந்த படங்களுக்கான விருதுகள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன் நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதை ஆசிரியர், சிறந்த உரையாடல் ஆசிரியர், சிறந்த பாடல் ஆசிரியர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த சண்டை பயிற்சியாளர், சிறந்த நடன ஆசிரியர், சிறந்த ஒப்பனைக் கலைஞர், சிறந்த தையல் கலைஞர், சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதே விழாவில் 2006 2007ஆம் ஆண்டுக்கும், 2007 2008ம் ஆண்டுக்குமான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன. |
No comments:
Post a Comment