Monday, August 31, 2009

டைரக்டர் கேட்கும் ஒன்றரை கோடி! தடுமாறும் தயாரிப்பாளர்

உருக்கினா செய்கூலி, உரசுனா சேதாரம்கிறது நகையை பொறுத்த வரைக்கும் சரி. ஆனால் கை கொடுத்து காப்பாற்ற வேண்டிய ஒரு தயாரிப்பாளரை உருக்கி, உரசி சேதாரமாக்கியிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அவரிடம் கன்னாபின்னாவென்று சம்பளம் பேசி அதிர வைத்திருக்கிறார்களாம் ஒரு ஹீரோவும் இயக்குனரும்.

பொக்கிஷம் படத்தை தயாரித்தவர் நேமிசந்த் ஜபக். இந்த படத்தில் பெரும் நஷ்டத்தை சம்பாதித்திருக்கும் அவர் அடுத்ததாக மாப்பிள்ளை என்ற படத்தை தயாரிக்கிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். சற்றே சரிவிலிருக்கும் தயாரிப்பாளரை மீட்டெடுக்க வேண்டிய இவர்கள்தான் அதிர அதிர சம்பளம் கேட்டு மிரள மிரள ஓட விடுகிறார்களாம்.

தனுஷ் கேட்கும் ஐந்து கோடி சம்பளத்தை தர தயாராக இருக்கிறாராம் தயாரிப்பாளர். ஆனால் இயக்குனர் கேட்பது எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி. சரி, அதற்கும் தயார்தான். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அழைக்கலாம் என்றாராம் சுராஜ். சரி போகட்டும் என்றால் ஸ்ரீதேவி கேட்பது ஒரு கோடியாம். தனுஷ் பட வியாபாரத்தோடு ஒப்பிட்டால் இவர்களின் சம்பளமே பட்ஜெட்டில் முக்கால் வாசி பணத்தை விழுங்கிவிடும். பிறகு எப்படி படத்தை முடிப்பது? வியாபாரம் செய்வது? அதிர்ந்து போன தயாரிப்பாளர் ஸ்ரீதேவிக்கு பதிலாக நம்ம ஊர் நடிகைகள் யாரையாவது வைத்துக் கொள்ளலாம் என்றும், டைரக்டரின் சம்பளத்தை குறைக்கலாம் என்றும் பேசி வருகிறாராம்.

கொஞ்சம் இறங்கி வாங்க சாருங்களா, தயாரிப்பாளரும் பிழைக்கட்டும்!

No comments: