Saturday, December 12, 2009

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

No comments: