Friday, October 9, 2009

கர்நாடக வெள்ள நிவாரணம்: கை கொடுக்கும் இன்போசிஸ்!

பெங்களூர்: வடக்கு கர்நாடகத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 6000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இன்போசிஸ் நிறுவனமும், பயோகான் நிறுவனமும் முன்வந்துள்ளதாக முதல்வர் [^] எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்போசிஸ் மற்றும் பயோகான் ஆகிய இரு பெரும் நிறுவனங்களும் வெள்ளம் [^] பாதித்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க முன்வந்துள்ளன.

பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் வடக்கு கர்நாடகத்தின் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏராளமான வீடுகள் சிதைந்து போய் விட்டன. லட்சக்கணக்கான மக்கள் [^] பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் பயோகான் தலைவர் கிரண் மஜூம்தார்ஷா ஆகியோர் எதியூரப்பாவை சந்தித்துப் பேசினர். அப்போது தங்களது நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தனர்.

இந்தத் திட்டத்தின்படி இன்போசிஸ் நிறுவனம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் 3000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும். ஒவ்வொரு வீடும் ரூ. 1லட்சம் செலவில் கட்டப்படும். அதேபோல பயோகான் நிறுவனமும் இதே அளவிலான வீடுகளை, இதே செலவில் கட்டித் தரும்.

அதேபோல விப்ரோ நிறுவனமும் அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தனது பங்கை அது தெரிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர பெங்களூரைச் சேர்ந்த குர்லான் மெத்தைகளைத் தயாரிக்கும் பிரபல செஞ்சுரி குழுமம், ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 2000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

அமால்கமேட்டட் பீன்ஸ் காபி விற்பனை நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் 1000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவரான சித்தார்தா, மத்திய வெளியுறவு அமைச்சர் [^] எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கன மழை மற்றும் வெள்ளத்தால் 3 லட்சத்து 58 ஆயிரத்து 755 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன அல்லது சேதமடைந்துள்ளன என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசும் வெள்ள நிவாரண நிதியை சேகரித்து வருகிறது. இந்த நிதிக்கு 2 நாட்களில் ரூ. 320 கோடி அளவுக்கு நிதி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments: