Sunday, October 11, 2009

ஆவேச நடிகர்கள்... சினிமா பிரஸ் கிளப் கண்டனம்

பத்திரிகையாளர்கள் மீது நடிகர்கள் நடத்திய வார்த்தை தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர் சங்கங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்களையும் கண்டனங்களையும் எழுப்பி வருகிறது.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் விவேக்கின் கொடும்பாவியை எரிக்கிற முடிவு, போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சினிமா பிரஸ் கிளப் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியை விமர்சிக்கவும் கண்டனக் கூட்டம் நடத்தவும் அந்த செய்தி தவறு என்று வாதிடவும் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அவர், அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

அதற்காக இதையே ஒரு காரணமாக கொண்டு ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் பொது மேடையில் கேவலமாக பேசுவதும் இழிவுபடுத்தி பேசியதையும் சினிமா பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக 07/10/2009 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் நடிகர் விவேக், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தி பேசியது கடும் கண்டனத்திற்குரியது.

செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்வதும், அந்த வழக்கின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிற ஒன்றுதான். ஆனால் முதன் முறையாக ஒரு செய்தி வெளியிட்டதற்காக பெண் கொடுமை சட்டத்தில் செய்தி ஆசிரியர் ஒருவரை கைது செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா பிரஸ் கிளப் கருதுகிறது.
எனவே கைது செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சினிமா பிரஸ் கிளப் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: