சிந்து மேனன்... தமிழுக்கு கிடைத்திருக்கும் திறமையான கதாநாயகி. கடல்பூக்கள், யூத், சமுத்திரம் என முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும், ஈரம் படமே அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. கேரளாவில் பிறந்து, தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டு, பெங்களூருவில் வசித்துவரும் அவருடனான சந்திப்பிலிருந்து...
ஈரத்திலிருந்து தொடங்கலாமா?
எல்லா நடிகைகளுக்கும் நல்ல ஹீரோ, திறமையான இயக்குனர், பெரிய தயாரிப்பு நிறுவனம் அமைய வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. அந்த நேரத்தில் வந்த வாய்ப்புதான் ஈரம்.
எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது?
தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஈரத்துக்கு முன்னால் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் என்னுடைய கேரக்டர்கள் பேசப்படவில்லை. அதே நேரம் மலையாளம், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தன.
நல்ல கேரக்டர் வந்தால் தமிழில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில் பத்திரிக்கையில் வந்த என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த இயக்குனர் அறிவழகன் ஈரம் கதையுடன் என்னைப் பார்க்க வந்தார். பெரிய பேனர், திறமையான இயக்குனர், நல்ல கேரக்டர், உடனே ஒப்புக் கொண்டேன்.
மேக்கப் இல்லாமல் நடித்திருந்தீர்கள்...?
இதற்கு முன்பும் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன். ஒரு சாதாரண ஹவுஸ் ஒய்ஃப் எப்படி இருப்பாரோ அதே மாதிரி திரையில் தெரிய வேண்டும் என்பதால் மேக்கப் போடவில்லை.
ஈரம் படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என ஒப்பந்தம் போட்டிருந்ததால்தான் உங்களை வேறு தமிழப் படங்களில் பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்களே?
அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை. நானாகதான் ஈரம் முடியும் வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஈரம் வெளிவந்தால் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்.
தற்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கேரக்டர் நன்றாக இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன். தெலுங்கில் சுபத்ரா, பிரேமே பில்லுஸ்துந்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
உங்களைத் தொடர்ந்து உங்கள் அண்ணனும் சினிமாவுக்கு வரப்போவதாக செய்திகள் வருகிறதே?
என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அதில் அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அண்ணன் மனோஜ் கார்த்தி. அவருக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. விரைவில் அவர் நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளது.
ஈரத்தில் ஆவியாக நடித்திருக்கிறீர்கள். ஆவி நம்பிக்கை உங்களுக்கு உண்டா?
ஆவி, பேயில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. அதெல்லாம் சுவாரஸியமான கதை அவ்வளவுதான்.
No comments:
Post a Comment