Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் ப்ரிவியூ -நட்சத்திரங்கள் பங்கேற்பு

இன்று காலை வரை ரசிகர்களை திணறடித்த படபடப்புக்கு விடை கிடைத்துவிட்டது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது நீதிமன்றம். தங்களுக்கு கமல் தரவேண்டிய சுமார் 7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை தர வேண்டும். இல்லையென்றால் அவர் நடித்து வெளிவரவிருக்கும் உன்னை போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த பிரச்சனை ஒருபுறம் குடைந்து கொண்டேயிருந்தாலும், கொஞ்சமும் பதறாமல் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் கமல். நேற்று இரவு தமிழ் திரைப்பட பிரமுகர்களுக்கும் சக நடிகர், நடிகைகளுக்கும் உன்னை போல் ஒருவன் படத்தின் பிரிமியர் காட்சியை திரையிட்டார் கமல். ஏராளமான நடிகர்கள் பேரார்வத்துடன் இந்த பிரிமியர் ஷோவில் கலந்து கொண்டார்கள்.
மறுநாள் பொழுது கமல் நினைத்தபடியே பாஸிட்டிவாக துவங்கியது. உன்னை போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.
'உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிட தடை விதித்தால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இந்த படத்துக்காக ரூ.40 கோடி செலவு செய்துள்ளோம். படத்தை வெளியிடுவதில் காலதாமதம் செய்தால் படத்துக்கு முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தப்படுத்தி பணம் பெறுவதுதான் மனுதாரரின் நோக்கம். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கமல் தரப்பில் கூறப்பட்டது.
இருதரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வருகிற செப்டம்பருக்குள் கமல் தரப்பிலிருந்து ரூ.4 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், படத்தை நாளை வெளியிட எந்த தடையுமில்லை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

No comments: