மர்மயோகி' படம் கைவிடப்பட்டதால் பிரமிட் சாய்மிராதான் எனக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு தரவேண்டும். இதைப் பெற நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் அதை மறைத்துவிட்டு நான் ரூ.10.90 கோடி தரவேண்டும் என்றும், எனது 'உன்னைப் போல் ஒருவனுக்கு'த் தடை வாங்கிவிட்டதாகவும் பிரமிட் சாய்மிரா நோட்டீஸ் அனுப்பியிருப்பது விஷமத்தனமான பிரச்சாரமாகும் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
'மர்மயோகி' படத்தை கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலும் பிரமிட் சாய்மிராவும் கூட்டாகத் தயாரிப்பதாக அறிவித்தன. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருந்த இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு கமல்ஹாஸனுக்கு ரூ.10.90 கோடி அட்வான்ஸும் தரப்பட்டது.
ஆனால் எதி்ர்பாராதவிதமாக 'மர்மயோகி' தயாரிப்பு தள்ளிப் போவதாக அறிவித்தது பிரமிட் சாய்மிரா. கமல்ஹாஸனும் அதை உறுதிப்படுத்துவதுபோல தனது சொந்தப்படமான 'உன்னைப்போல் ஒருவன்' பட வேலைகளில் மும்முரமானார்.
இன்னும் சில தினங்களில் அந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் கமல்ஹாஸன் தங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தரவேணடும் என பிரமிட் சாய்மிரா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம் என்றும் எச்சரித்திருந்தது. இந்த நோட்டீஸை பத்திரிகைகளுக்கும் அளித்திருந்தது சாய்மிரா நிறுவனம்.
படத்துக்குத் தடையா?:
மேலும் கமல்ஹாஸனின் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியிருப்பதாகவும் சாய்மிரா கூறியதாக செய்திகள் வெளியாகி்ன.
இந்த நோட்டீஸுக்கும் தடை குறித்த செய்திக்கும் கமல் இன்று பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரமீட் சாய்மீரா நிறுவனம், 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளதாக சில இதழ்களில் (தட்ஸ்தமிழ் அல்ல) செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல.
இதுகுறித்த உண்மைகளை வெளி்ப்படுத்த விழைகிறேன்.
'மர்மயோகி' படம் நின்று போனதும், அதற்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததே. 'மர்மயோகி' படத்துக்காக நான் மிகத் தீவிரமாக உழைத்தேன். ஒரு வருட காலமாக இதற்காக வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் செலவிட்டேன்.
மிக விரிவான் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன, நடிக்கப்பட்டன, இயக்கப்பட்டன.
ஆனால் படப்பிடிப்பைத் தொடரத் தேவையான நிதியைத் திரட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனத்தால் முடியாமல் போனதால்தான் இந்தத் திட்டம் முடங்கிப் போனது.
எனது திரையுலக வாழ்க்கையின் ஒரு வருட காலத்தை நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்காக இழந்துள்ளேன். அது மட்டுமல்லாமல் ரூ. 40 கோடி வருமானத்தையும் இழந்துள்ளேன். இதுதொடர்பாக எனக்கு ரூ. 40 கோடியைத் தர வேண்டும் என்று கோரி 2009, ஏப்ரல் 12ம் தேதி நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் இதுவரை அந்த நோட்டீஸுக்கு சாய்மீரா பதில் தரவில்லை.
மேலும், சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் பல்வேறு கோர்ட்களில் கேவியட் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளோம். பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டு வந்தது.
படத்துக்குத் தடை இல்லை...:
இந் நிலையில், எனது சட்டப்பூர்வமான நடவடிக்கைளை தடுக்கும் வகையில், பத்திரிகைககள் மூலம் எனக்கு எதிரான விஷமப் பிரசாரத்தில் சாய்மீரா நிறுவனம் இறங்கியுள்ளது. தவறான குற்றச்சாட்டுக்களையும், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கான இடைக்கால பதிலறிக்கையையும் நாங்கள் அனுப்பி விட்டோம்.
உண்மை என்னவென்றால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கேவியட் பெற்றுள்ளோம். நானோ அல்லது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமோ 'உன்னைப் போல் ஒருவன்' பட ரிலீஸுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவை எந்த கோர்ட்டிலிருந்தும் பெறவில்லை என்று கமல் கூறியுள்ளார்.
பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஏற்கனே பங்கு வர்த்தக மோசடி தொடர்பான ஒரு சிக்கலிலும் மாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment