எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களின் இயக்குநரும் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகனுமான ஜோதி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
தனது இரண்டு படங்களின் மூலம் இலியானா, தமன்னா, ஸ்ரேயா என இன்றைய முன்னணி நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் ஜோதிகிருஷ்ணா.
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளமை துள்ளும் ஜாலிப் படத்தோடு ரசிகர்களைச் சந்திக்க வருகிறார்.
இந்த முறை ஒரு இயக்குநராக மட்டுமல்ல... நாயகனாகவும்.
'ஏன் இந்த இடைவெளி?' -
"ரெண்டு படம் முடிச்ச பிறகு, புதிய ஸ்கிரிப்ட் ரெடி பண்ண உட்கார்ந்தேன். எதுவுமே சரியா அமையல. வெறுத்துப் போய், 'இனி சினிமாவே வேணாம்பா... இருக்கிற பிஸினஸ் பார்க்கலாம்!' என ஒதுங்கியிருந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் கலைச் செல்வம் வந்தார். அப்பாவின் நெருங்கிய நண்பர்.
எனக்கு 20 உனக்கு 18 மாதிரி ஒரு ஜாலியான, இளமை பொங்கும் படம் பண்ணலாம் என்றார். சின்ன தயக்கத்துக்குப் பிறகு ஒரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அவருக்குப்பிடித்துப் போனது. டைட்டிலைச் சொன்னேன், இன்னும் பிடித்துவிட்டது.
சரி, நாயகனாக யாரை போடலாம் என இரண்டு மாதங்களாகத் தேடினோம். இந்தக் கதைக்கு ஒரு புதுமுகம் இருந்தால் பெட்டராக இருக்கும் என்று தோன்றியது. யாரும் சரியாக அமையவில்லை. ஒரு நாள் கலைச்செல்வம் என்னிடம், நீங்களே நாயகனாக நடியுங்கள் என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஒரு கட்டத்தில் நான் நடித்தால்தான் இந்தப் படத்தையே தயாரிப்பேன் என்று கூறினார்.
எனது நண்பரும் பிஆர்ஓவுமான ஜான் மற்றும் சில நண்பர்களை கலந்து ஆலோசித்துவிட்டு பின்னர் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
நான் ஹீரோவான கதை இதுதான்..."
உங்கள் தம்பி ரவி கிருஷ்ணாவை கேட்கவில்லையா?
"சில காரணங்களுக்காக நானும் தம்பியும் இப்போதைக்கு சேர்ந்து படம் பண்ணுவதில்லை என முடிவு செய்துள்ளோம். சொல்லப் போனால் இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமானவர் ரவி கிருஷ்ணாதான். நேரம் வரும்போது இருவரும் சேர்ந்து படம் செய்வோம்..."
அதென்ன தலைப்பு... ஊலலலா?
"கேட்கும்போதே ஒரு ஜாலியான பீல் வருதில்லையா... அதான் இந்தத் தலைப்பு. அதே நேரம், படத்தின் நாயகன் கேர்ள் பிரண்ட்ஸ் வேண்டும் என்று பத்து பெண்களின் பின்னாலேயே சுற்றுவான். அந்தப் பெண்களில் சிலரது பெயரின் முதல் எழுத்தைத்தான் இப்படி தலைப்பில் சேர்த்துள்ளோம். ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா போன்ற பெயர்களின் முதலெழுத்து இந்தப் படத்தின் தலைப்பு!"
படத்தின் நாயகி பற்றிச் சொல்லுங்க...
"ப்ரீத்தி பண்டாரி... பஞ்சாப் பொண்ணு... மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். தமன்னா, இலியானா, ஸ்ரேயா போல இவரும் அழகான திறமையான நடிகையாக வருவார்...
இலியானா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்களை அறிமுகப்படுத்தியதே நீங்கள்தானே... அவர்களை இந்தப் படத்துக்குக் கேட்கவில்லையா?
"அவர்களை நான் அறிமுகப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவர்கள் தங்களது திறமையால், நல்ல இயக்குநர்களிடம் பணியாற்றி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர். இன்றைக்கும் என்மீது மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால் திரையுலகில் அத்தனை சீக்கிரம் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் போய் கால்ஷீட் கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.
இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஓ போடு' ராணி, அம்மா ராஜா என தேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர், என்றார் ஜோதி கிருஷ்ணா.
ஊலலலா படத்தின் இசையமைப்பாளர்களாக சேகர் சந்திரா - வி குமார் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவை ஆர் ஜி சேகரும், படத்தொகுப்பை ரங்கீஸ் சந்திரசேகரும், வசனத்தை சேகர் பிரசாத்தும் கவனிக்கிறார்கள். ஏக்நாத், தமிழ் வேடத்தில் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சிட்டிபாபு, மதன்பாபு, பட்டிமன்றப் புகழ் அமுதன் மற்றும் சேகர் பிரசாத் பாடல்களை எழுதுகிறார்கள். நடனம் ரேவதி தினேஷ், கிரிஷ். சண்டைப் பயிற்சி பில்லா ஜெகன். கலை இயக்கத்துக்கு ஆறுமுகம், ஜெய் வர்மா பொறுப்பேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment